ஓபிஎஸ், இபிஎஸ் கையெழுத்துக்கு தடை கோரும் வழக்கு - தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு
அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுவில் ஓபிஎஸ், கையெழுத்திட தடை கோரிய வழக்கில் தீர்ப்பை 25-ந்தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
வேட்பாளர்கள் வேட்புமனு படிவத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் அங்கீகாரம் வழங்கி கையெழுத்திட தடை விதிக்க கோரி அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அ.தி.மு. க.வின் விதிகளின்படி வேட்பாளர்களின் மனுவில் கையெழுத்திட பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை மார்ச் 28-ந்தேதிக்கு ஒத்தி வைத்திருந்தது.தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 19-ந் தேதி தொடங்குவதால் உடனே தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கே.சி.பழனிசாமி தரப்பில் முறையிடப்பட்டது. இதனால் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.
ஆனால் இந்த வழக்கில் இன்றும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. வருகிற 25-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்துள்ளது. மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கி வரும் 26-ந்தேதி முடிவடைகிறது. இந்நிலையில் தீர்ப்பு தேதி தள்ளிப் போனதால் ஓபிஎஸ், இ பிஎஸ் இருவரும் வேட்புமனுக்களில் கையெழுத்திடுவது செல்லுமா? சொல்லாதா? என்ற குழப்பம் அதிமுகவில் நீடிக்கிறது.