இந்தியாவின் முதல் லோக்பால் தலைவர்... - பினாகி சந்திரகோஷ் நியமனம்

பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் கடந்த 2013-ம் ஆண்டு லோக்பால் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. அதேபோல, மாநிலங்களின் முதலமைச்சர், அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதான ஊழல் புகாரை விசாரிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, ஒரு சில மாநிலங்களில் ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்பட்டது. எனினும், லோக்பால் அமைப்பு அமைக்கப்படாமல் இருந்தது. எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்குப் பிறகு அதுவும் நீண்ட இழுபறிக்கு பின்னர் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. லோக்பால் அமைப்பின் தலைவராக நியமிக்கப்படுபவர், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ இருந்திருக்க வேண்டும் என்பதாலும் லோக்பால் ஆணையத்தில் 8 உறுப்பினர்கள் வரை இடம்பெறலாம் என்பதாலும் தலைவர் குறித்த ஆலோசனை நடந்து வந்தது.

ஆலோசனையில் முடிவில் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் லோக்பால் அமைப்பின் முதலாவது தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான ஆணையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டுள்ளார். இந்த அமைப்பில் நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களாக நீதிபதிகள் திலிப் பி.போசலே, பிரதீப் குமார் மொகந்தி, அபிலாஷா குமாரி, அஜய் குமார் திரிபாதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நீதித்துறை அல்லாத உறுப்பினர்களாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தினேஷ் குமார் ஜெயின், ஐ.பி.எஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்தர் சிங், டாக்டர் இந்தர்ஜித் பிரசாத் கௌதம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

More News >>