பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது..? வெறுங்கையுடன் திரும்பிய தமிழிசை
தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. நேற்று இரவே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெல்லியில் முடிவு எட்டப்படாததால் வெறுங்கையுடன் இன்று காலையிலேயே சென்னை திரும்பினார் தமிழிசை.
அதிமுக கூட்டணியில் குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை தொகுதிகளை குறிப்பட்டு கேட்டு வாங்கிய பாஜக வேட்பாளர்களை இறுதி செய்வதில் படாதபாடுபடுவதாக தெரிகிறது.தமிழிசைக்கு தூத்துக்குடியும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு குமரியும் மட்டுமே உறுதியாகியுள்ளதாக தெரிகிறது. சிவகங்கையில் எச்.ராஜாவை களம் இறக்க பாஜக மேலிடம் அமுத்தம் கொடுத்தாலும், தமிழக பாஜகவில் ஒரு தரப்பும் அதிமுகவும் எதிர்ப்பு காட்டுவதால் முடிவு எட்டப்படவில்லையாம்.
கோவை, ராமநாதபுரம் தொகுதிகளில் ஏதாவது ஒன்றை தனக்கு ஒதுக்கியே ஆகவேண்டும் என்று வானதி சீனிவாசன் ஒற்றைக் காலில் நின்று அடம் பிடிப்பதால் வேட்பாளர் அறிவிப்பு இழுபறியாகக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று இரவே வெளியாக வேண்டிய பட்டியல் வெளியாகவில்லை.
இதனால் தம் தொகுதி தமக்கு உறுதி என்ற திருப்தியில் பட்டியலை பாஜக மேலிடமே வெளியிடட்டும் என்று வெறுங்கையுடன் தமிழிசை இன்று அதிகாலை விமானம் பிடித்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் வேட்பாளர் பட்டியல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இன்று பிற்பகலுக்குள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்று பொத்தாம் பொதுவாக கூறிவிட்டு சென்று விட்டார்.