ஆண்டுதோறும் 'அப்ரைசல்' என்னும் பணி திறன் மதிப்பீடே ஊதியம் மற்றும் பதவி உயர்வுக்கு அடிப்படையாகிறது. நாம் நன்றாகவே வேலை செய்கிறோம் என்று நம்பி வந்தாலும் அதிகாரிகளின் கண்கள் நாம் காண தவறிய பல விஷயங்களை கண்டு பிடித்து விடும்.
ஆண்டு முழுவதும் நாம் எவற்றையெல்லாம் சாதித்தோம் என்பதுடன் அலுவலகத்தில், சக ஊழியர்களிடம், அதிகாரிகளிடம் எப்படி நடந்து கொண்டோம் என்பதும் கருத்தில் கொள்ளப்படும்.
காலையில் பரபரப்பாக கிளம்பும் பலர் அலுவலகத்தில் வேலை செய்ய ஆரம்பித்ததும் சோர்ந்து விடுகின்றனர். வேறு சிலர் உடன் வேலை பார்ப்பவர்களிடம் எரிந்து விழுகின்றனர். இன்னும் சிலர் கவன குறைவாய் பிழை செய்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? முந்தைய இரவில் போதுமான நேரம் உறங்காததுதான். பின்னிரவு வரை தொலைக்காட்சி பார்ப்பது, நண்பர்களுடன் தொலைபேசியில் அரட்டை அடிப்பது, மொபைல் போனில் மேய்ந்து கொண்டிருப்பது - இவை நம் உறக்கத்திற்கான நேரத்தை திருடி விடுகின்றன.
பகலெல்லாம் உழைத்துக் களைத்த மூளையிலுள்ள நச்சு புரதங்களை நாம் தூங்கும்போதுதான் உடல் அகற்றுகிறது. நன்றாக உறங்கி எழும் ஒருவரின் மூளை, போதுமான அளவு உறங்காதவரின் மூளையைக் காட்டிலும் அதிக செயல்திறன் கொண்டிருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
குறைவாக உறங்குபவருக்கு பசி அதிகமாக இருக்குமாம். அதிக பசியால் தேவைக்கு அதிகமாக உண்ண நேரிடும். இதனால் செரிமான கோளாறு வருவது மட்டுமல்ல, உடலும் பருமனாகும். இவ்வாறு உடல்நல குறைவுக்கு வழிவகுக்கும்.இரவில் நம்மையுமறியாமல் நேரத்தை வீணாக்கி தூக்கத்தை இழப்பது மறுநாள் பணியில் விரும்பத்தகாத விளைவுகளுக்கு காரணமாகி விடும். நாளடைவில் நம்மேல் தவறான எண்ணம் ஏற்படும்.
சமூக ஊடகத்தில் நகைச்சுவை ஒன்றை வாசித்தேன். இரண்டு நாய்கள் பேசிக் கொள்கின்றன. ஒரு நாய், "நேற்று இரவு இரண்டு மணிக்கு எங்கள் வீட்டுக்குள் திருடன் நுழைந்து விட்டான். நான் தூங்கி விட்டேன். நல்லவேளை! என் முதலாளி விரட்டி விட்டார்," என்றதாம். அடுத்த நாய், "முதலாளி விரட்டினாரா? உனக்கு இதைச் சொல்ல வெட்கமாய் இல்லை?" என்று கேட்டது மற்றொரு நாய். அதற்கு முதல் நாய், "இரவெல்லாம் தூங்காமல் மொபைல் போன் பார்ப்பதற்கு நான் மனிதனா? நான் நாய்," என்றதாம்.
இரவு உறங்காமல் மொபைல் போனில் மேய்ந்தால் சம்பள உயர்வு கிடைக்காமல் போகலாம், ஜாக்கிரதை!