இன்று சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி பற்றிய சின்ன சின்ன சேதிகள்

சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அழிந்து வருவதாக கூறப்படும் சின்னஞ்சிறு பறவையைப் பற்றிய சின்னச் சின்ன சேதிகள் சிலவற்றை பார்ப்போம்.

கேட்கக் கேட்க சலிக்காத ஓசைதான் இந்த சிட்டுக் குருவியின் குரல்.... பன்னெடுங்காலமாக மனிதர்களோடு ஒன்றிப் பழகிவிட்ட ஒரு அற்புதமான உயிரினம் சிட்டுக் குருவி.

தமிழ்த் திரைப்பாடல்களில் சிட்டுக்குருவிக்கு தனி இடம் உண்டு. நிலவுக்கு அடுத்தபடியாக பாடல்களில் அதிகம் இடம்பெற்ற பேசுபொருள் இந்த சிட்டுக்குருவிதான்

சோகத்தில் ஆழ்ந்திருப்போருக்கும், சுதந்திரமாகச் சுற்றித் திரிய ஆசைப்படுவோருக்கும் சிட்டுக்குருவியிடம் பதில் உண்டு.

வீட்டின் மூலைகள், உத்திரம், வாயிற்கதவு, தோட்டங்கள் என ஆங்காங்கு கூடு கட்டி வாழ்ந்த சிட்டுக்குருவி இனம், நிலம் நீர் மாசு காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக பேரழிவைச் சந்தித்து வருகிறது.

குறைந்துபோன கிராமங்கள், அதிகரித்து வரும் நகரமயமாக்கல் போன்றவை சிட்டுக்குருவியின் வீழ்ச்சிக்கு காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். செல்போன்கள் வருகையால், சிட்டுக்குருவிகள் பேரழிவைச் சந்தித்ததாகக் கூறப்பட்டாலும், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

சிட்டுக்குருவிகள் காடுகளில் இருந்து ஊருக்குள் வந்தவை என்று கூறும் ஆய்வாளர்கள், கூடுகட்ட இடமின்மை, வாகனப் போக்குவரத்து, இரைச்சல் போன்ற காரணிகளால் முட்டைகள் பொரியாமல் போனதால் மீண்டும் அவை காட்டுக்கே திரும்பி விட்டதாகத் தெரிவிக்கின்றனர்.

சிட்டுக் குருவிகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இருந்தாலும், அதற்காக பரிதாபப்படும் நாம், நம் கண்முன்னே அழிந்து விட்ட தமிழக பாறு கழுகுகளையும், இருவாட்சி பறவையையும் பற்றி கவலைப்பட மறந்து விட்டோம். மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளால் வாழ முடியும். ஆனால் பறவைகள் இல்லாத உலகில் மனிதனால் ஒருபோதும் வாழ இயலாது என்பது பறவையியலின் தந்தை சலீம் அலி சத்தியமான வார்த்தை. எனவே இயற்கையையும், பறவைகளையும் பாதுகாப்போம்.

 

More News >>