பிரதமர் மோடியையும் புறக்கணிக்கலாமே..?பாஜக எம்.பி.க்களுக்கு சீட் மறுக்கப்பட்டது குறித்து அகிலேஷ் கிண்டல்

உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.பி.க்கள் பலருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததைக் குறிப்பிட்டு டீம் காப்டனான பிரதமர் மோடியையும் புறக்கணிக்க வேண்டியதுதானே? என்று டிவீட் செய்து அகிலேஷ் யாதவ் கிண்டலடித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2014 பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதிகளை அள்ளியது பாஜக . அப்போது பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தனித்தனியே நின்றதாலும் மோடி ஆதரவு அலையாலும் பாஜகவுக்கு வெற்றி சாதகமானது. தற்போதைய தேர்தலில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி சேர்ந்துள்ளது. காங்கிரசுடனும் சில தொகுதிகளில் விட்டுக் கொடுத்து சமரசம் செய்துள்ளனர்.

இதனால் இந்தத் தேர்தல் பாஜகவுக்கு சவாலானதாக அமைந்துள்ளது. மேலும் தற்போதைய எம்பிக்களில் பலரும் தொகுதியில் ஏகப்பட்ட அதிருப்தியை சம்பாரித்து வைத்திருப்பதும் பாஜகவுக்கு வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் பலமான சமாஜ்வாதி-பகுஜன் கூட்டணியை எதிர்கொள்ள தற்போதைய பாஜக எம்.பி.க்கள் பலருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதே போன்று சமீபத்தில் சட்டசபைத் தேர்தலில் படுதோல்வியடைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் சிட்டிங் எம்.பி.க்கள் அனைவருக்குமே பாஜகவில் மீண்டும் சீட் வழங்கப்படவில்லை.

தோல்வி பயத்தால் பாஜக எம்பிக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு டிவிட் செய்துள்ள சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஒரு டீம் தோற்றுவிட்டது என்றால் டீமில் உள்ள மெம்பர்களை மட்டும் மாற்றினால் போதுமா? கேப்டனுக்குத் தானே முழு பொறுப்பு. எனவே காப்டனான மோடியையும் புறக்கணிக்க வேண்டியதுதானே? என்று அகிலேஷ் கிண்டலடித்துள்ளார்.

More News >>