அமமுகவில் இருந்து வி.பி.கலைராஜன் நீக்கம்! தேர்தல் நேரத்தில் டிடிவி தினகரன் அதிரடி
அமமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் விபி கலைராஜன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அமமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் தி.நகர் எம்எல்ஏ வி.பி.கலைராஜன். தினகரன் அணியில் முக்கியமான ஆளாக வலம் வந்தார். இந்நிலையில் தற்போது வி.பி.கலைராஜனை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ``கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் கலைராஜன் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது’’ என்று தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த நீக்கம் தற்போது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.