டிடிவி தினகரனின் அதிரடி நடவடிக்கை சீக்ரட் - வி.பி. கலைராஜன் விவகாரம்
அமமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் விபி கலைராஜன் நேற்று அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான, அறிக்கையை அமமுக கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.
`கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும்’ அவரை நீக்கம் செய்வதாக டிடிவி அறிவித்தார்.
ஏன் இந்த திடீர் அறிவிப்பு...
சசிகலா குடும்பத்துக்கு முகவும் நெருக்கமானவர் வி.பி.கலைராஜன், அதிமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். அதன்பிறகு, கட்சி செயல்பாடுகளில் கலைராஜனின் பங்களிப்பை ஓரங்கட்டினார் ஜெயலலிதா. ஜெ.,வின் மறைவை அடுத்து நடந்த களேபரத்தில் டிடிவி அதிமுகவை விட்டு வெளியேறினார். இந்நிலையில், டிடிவி-யின் தீவிர ஆதரவாளராக மாறினார் கலைராஜன்.
அமமுகவில் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக வி.பி.கலைராஜன் நியமிக்கப்பட்டார். அமமுக மிகுந்த செல்வாக்குடன் வலம் வந்த கலைராஜன், திமுகவுடன் நெருக்கம் காட்டி வருவதாகத் தகவல் கசியத் தொடங்கியது. அதோடு, கலைராஜன் – தினகரன் இடையில் முரண்பாடுகளும் ஏற்பட்டன. இதனால், கட்சி செயல்பாடுகளில் கலைராஜன் தலையிடாமல் இருக்கவே, அவரை அதிரடியாக நீக்கினார் டிடிவி.
மேலும், திமுக கட்சியில் இணைவதற்காக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் கலைராஜன் பேசியுள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.