பிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி - களத்தில் குதிக்கிறார் அய்யாக்கண்ணு
விவசாயிகள் போராட்டத்தில் பல புதுமைப் புரட்சிகள் நடத்திய அய்யாக்கண்ணு, தற்போது மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேரை போட்டியிட வைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
காவிரி விவகாரம், தமிழக விவசாயிகளின் கடன் பிரச்னை, தற்கொலை கொடுமைகள் என பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தியவர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு.
டெல்லியில் விவசாயிகள் பலருடன் டேரா அடித்து பல நாட்களாக அரை நிர்வாணப் போராட்டத்தில் எலிக்கறி சாப்பிடுவது, மனித மலம் சாப்பிடுவது, தரையில் உருள்வது, மண்டையோடுகளை மாலையாக அணிவது என பல நூதன போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. கடைசியில் டெல்லி வீதிகளில் நிர்வாணமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்தியர் அய்யாக்கண்ணு.
தற்போதும் தேசிய அளவில் தமிழக விவசாயிகளின் பிரச்னைகளை வெளிப்படுத்தி தமிழக விவசாயிகள் 111 பேரை பிரதமர் மோடிக்கு எதிராக களம் இறக்கப் போவதாக அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் களத்தில் பிரதமர் மோடி வாரணாசியிலோ அல்லது அவர் வேறு எங்கு போட்டியிட்டாலும் 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனுத்தாக்கல் செய்து மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள் என்று அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.