`வேர்ல்டு கப் ஒன்னும் அவ்வளவு ஈஸி கிடையாது - கோலி படையை எச்சரிக்கும் டிராவிட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது, உலகக்கோப்பைக்கான எச்சரிக்கை என முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இத்தொடர் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையை எளிதாக வெல்லும் என்று கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்திய அணிக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார் முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்திய அணி வீரர்கள் நேரடியாக நடந்து சென்று உலகக்கோப்பையை வென்றுவிட முடியாது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் இந்திய அணிக்கு மிகப்பெரிய விஷயத்தை நினைவுபடுத்தி உள்ளது. அதனால் இளம் வீரர்கள் அதிக கவனமாக செயல்பட வேண்டும்.
கடந்த இரண்டு வருடங்களாக இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. நாம் நம்பர் ஒன் அணியாக இருந்ததால், இங்கிலாந்து சென்று எளிதாக இந்தியா கோப்பையை வென்றுவிடும் என்ற பேச்சு இருந்து கொண்டே வந்தது. ஒருவேளை அப்படி நடந்தால் நல்லது தான். தற்போது வரைக்கும் நாம் கோப்பையை வெல்லும் ஒரு அணியாகத்தான் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த இலக்கு மிகவும் கடினமாக இருக்கும். மிகவும் போட்டி நிறைந்ததாக இருக்கும்” என்று எச்சரித்துள்ளார்.