பாகிஸ்தானியரை விட மகிழ்ச்சியான வாழ்க்கையில் பின்தங்கிய இந்தியர்கள் - ஐ.நா ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஐ.நா சபை வெளியிட்ட மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானியர் மற்றும் வங்காளதேசத்தவரை விட இந்தியர்கள் பின் தங்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச மகிழ்ச்சி தினமான மார்ச் 20-ந் தேதியை முன்னிட்டு மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐ.நா வெளியிட்டு வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

போர் சூழல், சமூக அமைதி, அரசின் மீதான மக்களின் நம்பிக்கை, வருமானம், வறுமை, தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்ட பல அம்சங்களை கருத்தில் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. 156 நாடுகளை ஆய்வு செய்து எடுக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 140-வது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு பட்டியலில் 133-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. பின்லாந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் பட்டியலில் அடுத்த வரிசையான இடத்தை பிடித்துள்ளது.

பாகிஸ்தான் 67-வது இடத்தையும், வங்காளதேசம் 125-வது இடத்திலும், சீனா 93-வது இடத்திலும் உள்ளது. இந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சியான சூழலில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>