ரஜினி, கமல், அஜித் இவர்களைத் தொடர்ந்து விஜய்க்கும் அதே ஒற்றுமை
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஒப்பந்தமாகியுள்ளார்.
விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் படத்துக்கு தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்படுகிறது. விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். சமீபத்தில் விஜய் படப்பிடிப்பில் ரசிகர்களை சந்தித்த காட்சி வைரலானதும் குறிப்பிடத்தக்கது. கதிர், விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய் இந்தப் படத்தில் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார். அதற்காக கடும் உடற்பயிற்சி மேற்கொண்டு உடலமைப்பையும் மாற்றியுள்ளார். கடந்த ஜனவரியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்துவருகிறது. தற்பொழுது சென்னையின் பிரபல கல்லூரியில் படப்பிடிப்பு நடந்து வருவது கூடுதல் தகவல்.
விஜய்க்கு வில்லனாக இந்தப் படத்தில் பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெரஃப் ஒப்பந்தமாகியுள்ளார். ஆரண்யகாண்டம், மாயவன் படங்களில் நடித்த ஜாக்கி ஷெரஃப், தமிழ் ரசிகர்களுக்கு அறிந்த முகமே. அதனால் விஜய்க்கு எதிராக வில்லன் ரோலில் பக்காவாக பொருந்துவார் என்கிறார்கள். தற்பொழுது ஜாக்கி ஷெரஃப் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் பாண்டி முனி, விக்ரம் பிரபு நடிக்கும் வால்டர் படங்களிலும் தற்பொழுது நடித்துவருகிறார். தவிர, தளபதி 63 படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருக்கிறது.
ரஜினியின் 2.0 படத்தில் அக்ஷய்குமார் வில்லனாக நடித்தார், இந்தியன் 2 படத்தில் அபிஷேக்பச்சன் வில்லனாக நடிக்கவிருக்கிறார். விவேகம் படத்தில் விவேக் ஓபராய் வில்லனாக நடித்தார். அவற்றைத் தொடர்ந்து விஜய் படத்திலும் பாலிவுட் நடிகரே வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடக்கது.