சையத் நாட்டை விட்டு வெளியேற கூடாது- 13 வயது இளைஞனுக்கு பாச கோரிக்கைகள் வைக்கும் நியூசிலாந்து மக்கள்

"இனி எனக்கு இங்கு யாரும் இல்லை. இந்த நாட்டை விட்டு வெளியேறுகிறேன்". 13 வயது இளைஞன் தீவிரவாதத்தின் கோரத்தால் உதிர்த்த வார்த்தைகள் இவை. கடந்த வெள்ளியன்று நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் தொழுகை நடந்துகொண்டிருக்கும் போது வலதுசாரி தீவிரவாதி ஒருவன் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் தங்கள் உயிரை பறி கொடுத்தனர்.

அதுவரை அமைதியான நாடென பெயர் எடுத்த நியூசிலாந்து தற்போது அமைதியை இழந்து தவித்து வருகிறது. உயிரிழந்தவர்களின் முதல்கட்ட இறுதி சடங்குகள் நேற்று தாக்குதல் நடத்தப்பட்ட மசூதி அருகே நடந்தது.

இதில், துப்பாக்கிச்சூட்டில் பலியான சிரிய அகதிகளான காலித் முஸ்தபா மற்றும் அவரது மகன் ஹம்சா ஆகியோரது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. உடல் அடக்கத்தின் போது நடந்த சம்பவங்கள் அங்கிருந்தவர்களை கண்ணீர் கடலில் மூழ்க வைத்தது. காலித் சிரியா நாட்டை சேர்ந்தவர் ஆவார். சிரியாவில் நடந்த உள்நாட்டு போரால் தன் குடும்பத்தினருடன் ஜோர்டான் நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்தார். ஆறு ஆண்டுகள் அங்கு வசித்தவர் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் தான் நியூசிலாந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் தான் கடந்த வெள்ளிக்கிழமை தனது மகன்கள் ஹம்சா மற்றும் சையத் உடன் மசூதிக்கு தொழுகைக்காக வந்துள்ளார். அப்போது தீவிரவாதி சுட்டதில் காலித் மற்றும் அவரது மூத்த மகன் ஹம்சா இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஆனால் அவரது இளைய மகன் சையத்துக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். பலத்த காயம் என்பதால் கை, கால்களை அசைக்க கூடாது என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இந்த எச்சரிக்கையும் மீறி தனது தந்தை மற்றும் சகோதரர் இறுதிச் சடங்கில் சையத் கலந்துகொண்டு நெகிழ வைத்துள்ளார். சடங்களை முன் இவர் அழுது கொண்டே செல்லும் காட்சியும், இறைவனிடம் பிரார்த்திக்கும் காட்சிகளும் வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் இறுதிச் சடங்கின் போது அவர் செய்த இன்னொரு செயலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த சம்பவத்தை விளக்கும் அங்கிருந்த ஒருவர் "மருத்துவர்கள் எச்சரிக்கையால் அவர், கை அசைக்கக் கூடாது என நாங்கள் எவ்வளவோ தடுத்துப் பார்த்தோம். ஆனால் அவன் மறுத்துவிட்டான். இந்த 13 வயது இளைஞனின் உணர்ச்சிமிகு செயலைக் கண்டு நாங்களும் கையையும் தூக்கி பிரார்த்தனை செய்தோம்" என நெகிழ்ந்து கூறியுள்ளார். ஆனால் அதேநேரம் இறுதிச் சடங்குக்கு பின்பேசிய சையத், "எனக்கு இனி இந்த நாட்டில் யாரும் இல்லை. அதனால், இனி நான் இங்கு இருக்கப்போவதில்லை. நியூஸிலாந்தை விட்டு வெளியேறுகிறேன்" என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

முன்னதாக தீவிரவாத தாக்குதல் குறித்து காலித்தின் மனைவி சல்வா அளித்த பேட்டியில், "ஆறு வருடம் ஜோர்டானில் அகதிகளாக வாழ்ந்தனர். ஒருகட்டத்தில் நியூஸிலாந்துக்கு இடம் பெயரலாம் என அவர்கள் முடிவெடுத்தபோது, அதை ஆமோதித்தேன். காரணம், உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடு நியூஸிலாந்து. நீங்கள் மிகவும் அற்புதமான நாட்டுக்குச் செல்கிறீர்கள். அங்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப்போகிறீர்கள் எனக் கூறி அனுப்பிவைத்தேன். ஆனால், இப்போது அது அனைத்தும் பொய்யாகிவிட்டது" எனக் கூறியுள்ளார். சையத்தின் இந்த அறிவிப்பை எதிர்பார்க்காத நியூசிலாந்து மக்கள் நாட்டை விட்டு வெளியேற கூடாது என பாச கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

 

 

 

More News >>