இளையராஜாவால் அங்கீகாரம் - சண்டையை மறந்து மனதார பாராட்டிய எஸ்.பி.பி.

இளையராஜாவால் பத்ம விபூஷன் சிறப்பு அங்கீகாரம் பெற்றுள்ளது என்று பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பழைய பூசல்களை மறந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இருவரும் ஒரே நேரத்தில் தங்களுக்கான பயணத்தை தொடங்கியவர்கள், இருவரும் மேதைகள், இவற்றையெல்லாம் தாண்டி இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இளையராஜாவை ‘அவன்.. இவன்...’ என்று பொதுவெளிகளில் கூட வெளிப்படையாக அழைப்பவர்கள் இரண்டு பேர். ஒருவர் பாரதிராஜா. மற்றொருவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவ்வளவுக்கு இருவருக்கும் நெருங்கிய பாசப் பிணைப்பு உண்டு.

இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் 50 ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் அமெரிக்காவில் இசைக்கச்சேரி நடத்தினார். அப்போது ஆர்க்கெஸ்ட்ராவில் தன்னுடைய பாடல்களைப் பயன்படுத்தியதற்காக காப்புரிமை கேட்டு பாலசுப்ரமணியத்துக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

அதன்பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக ஊடகங்கள் பெரிதுபடுத்திக் கூறின. இறுதியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களே, இந்த விவகாரம் எதிர்பாராதமாக நடந்துவிட்டது. தயவுசெய்து இந்த பிரச்சனையை இத்தோடு விட்டுவிடுங்கள் என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.

தற்போது குடியரசு தினத்தையொட்டி மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இசைத்துறை சாதனை புரிந்தமைக்காக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பழைய மன சங்கடங்களை எல்லாம் மறந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம், “பத்ம விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இளையராஜாவிடம் சென்றடைந்த பிறகு பத்ம விபூஷன் விருது சிறப்பு அங்கீகாரம் பெற்றுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

More News >>