களை கட்டும் தேர்தல் களம் - நல்ல நேரம் பார்த்து அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று விறுவிறுப் படைகிறது. நல்ல நாள், நேரம் பார்த்து அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர்.

வேட்பு மனுத்தாக்கல் கடந்த 19-ந் தேதியே ஆரம்பித்து விட்டது. கடந்த 3 நாட்களில் மொத்தமே 30 சுயேட்சைகள் மட்டுமே மனு செய்திருந்தனர். வேட்பாளர்கள் அறிவிப்பு தாமதமானதால் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் இதுவரை வேட்பு மனு செய்யவில்லை. 26-ந்தேதி வரை அவகாசம் இருந்தாலும் சனி, ஞாயிறு தவிர்த்து இன்றும், திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் மட்டுமே மனுத்தாக்கல் செய்யலாம் .

இன்று முகூர்த்த தினம் என்பதால் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று காலை 11.30 முதல் 12 மணிக்குள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய கட்சியின் மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மக்களவைக்கு 20, சட்டப்பேரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ள 18 அதிமுக வேட்பாளர்கள், மட்டுமின்றி அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, தேமுதிக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

திமுக தரப்பில் இன்றும் திங்கட்கிழமையும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸ் தவிர்த்து மற்ற கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து விட்டதால் தேர்தல் களம் களை கட்ட ஆரம்பித்துள்ளது

More News >>