பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றமா..?குழப்பத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்

இடைத்தேர்தல் நடைபெறும் பெரியகுளம் தொகுதி அதிமுகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சென்னையில் அரசுப் பணியில் இருக்கும் முருகனுக்கு உள்ளூரில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் அரசுப் பணியை துறக்க மனமில்லாமல் இன்னும் தொகுதிப் பக்கமே தலைகாட்டாமல் ரெண்டுங்கெட்டான் நிலைமையில் முருகன் இருப்பதால் வேறு வேட்பாளரை அதிமுக தலைமை அறிவிக்குமா? என்ற குழப்பம் நிலவுகிறது.

பெரியகுளம் (தனி)தொகுதி அதிமுக வேட்பாளராக என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.பெரியகுளம் தொகுதிக்குட்பட்ட டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த முருகன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை சமூக நல அதிகாரியாக உள்ளார். இவருடைய மனைவியும் அரசு மருத்துவர். கட்சியில் அறிமுகம் இல்லாத முருகனை வேட்பாளராக தேர்வு செய்தது உள்ளூர் அதிமுகவினரை கடுப்பேற்றியுள்ளது. துணை முதல்வர் ஓ.பி.எஸ்சுக்கு நெருக்கமானவர் என்பதாலும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வேண்டப்பட்டவர் என்பதாலும் முருகன் வேட்பாளராகி விட்டார்.

முருகனை வேட்பாளராக அறிவித்த உடனே பெரியகுளம் தொகுதி அதிமுகவினர் எதிர்ப்பு காட்டத் தொடங்கி விட்டனர். கட்சிக்கே அறிமுகமில்லாத, சென்னையில் வசிப்பவரை எப்படி வேட்பாளராக அறிவிக்கலாம். ஏற்கனவே தினகரன் தரப்பில் மீண்டும் டாக்டர் கதிர்காமுவை களம் இறக்குகிறது. அவருக்கு அனுதாபம் பிளஸ் தினகரன், தங்க .தமிழ்ச்செல்வன் செல்வாக்கால் தெம்பாக களமிறங்கும் போது டம்மியாக வேட்பாளராகப் போட்டால் திமுகவையும், அம முகவையும் ஜெயிக்க முடியுமா? என்று உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் கொந்தளித்து வருகின்றனர்.

இந்த எதிர்ப்பைக் கண்ட வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகனும் தேர்தலில் போட்டியிடுவதா? அரசுப் பணியில் தொடர்வதா? என்ற இரண்டுங்கெட்டான் நிலைமையில் இன்னும் தொகுதிப் பக்கமே தலைகாட்டாமல் உள்ளார்.

புதன்கிழமை தேனியில் ஓபிஎஸ் தலைமை நடந்த அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் தேனி மக்களவை வேட்பாளர் ரவீந்திரநாத், ஆண்டிபட்டி சட்டப்பேரவையில் போட்டியிடும் லோகிராஜன் ஆகியோர் பங்கேற்ற நிலையில் முருகன் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் முருகனின் பெயரை ஓ.பி.எஸ் உட்பட யாரும் உச்சரிக்சவும் இல்லை. இதனால் பெரியகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மாற்றம் நிச்சயம் என்றும் புதிய வேட்பாளர் எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்பது தான் பேச்சாக உள்ளது.

More News >>