சேலம் மாவட்ட பாமக நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம் - ஓமலூர் முன்னாள் எம்எல்ஏவும் தாவல்
சேலம் மாவட்ட பாமக செயலாளர் ஜெயவேல், ஓமலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ தமிழரசு உட்பட பாமக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் சீட் கிடைக்காத, கட்சியில் அதிருப்தியல் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சி தாவுவதும் ஜரூராகியுள்ளது. அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியேறி திமுகவில் இணைந்தார். அமமுக கட்சியில் கட்டம் கட்டப்பட்ட கலைராஜன் நேற்று மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக வில் ஐக்கியமானார்.
இந்நிலையில் சேலத்தில் நடந்த திமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பாமக மாவட்ட நிர்வாகிகள் பலர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து பாமகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டச் செயலாளர் ஜெயவேல் தலைமையில் ஓமலூர் தொகுதி முன்னாள் பாமக எம்.எல்.ஏ தமிழரசு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்
அதிமுக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் இணைந்திருந்தாலும் இரு கட்சியினரிடையே இன்னமும் இணக்கமான சூழல் உருவாகவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் துணைச் செயலாளரும் விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். இன்று முதன்முதலாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சேலம் மாவட்டம் ஏற் காட்டில் எல்.கே.சுதீஷை ஆதரித்து ஓட்டு வேட்டையாடினார். அதே நேரத்தில் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர், முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் ஏராளமானோர் திமுகவில் இணைந்தது பாமக மட்டுமின்றி அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.