பழி வாங்கப்படுகிறாரா அன்வர் ராஜா எம்.பி..?வக்ஃபு வாரியத்தில் சிபிஐ திடீர் ரெய்டு பின்னணியில் பகீர் தகவல்
அதிமுக எம்.பி.அன்வர் ராஜா தலைவராக உள்ள வக்ஃபு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீரென ரெய்டு நடத்தியுள்ளனர். அன்வர் ராஜாவிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளதாக பகீர் தகவல்கள் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இதன் தலைவராக தற்போதைய ராமநாதபுரம் தொகுதி அதிமுக எம்.பி. அன்வர் ராஜா இருந்து வருகிறார். வக்ஃபு வாரியத்தில் பல்வேறு முறைகேடு, ஊழல் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய தலைமை அலுவலகத்தில் 5-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் இன்று திடீரென ரெய்டு நடத்தினர். மேலும் அன்வர் ராஜா எம்.பி.யிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது பெரும் பபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மக்களவைத் தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையின் பின்னணியில் பழி தீர்க்கும் அரசியலும் உள்ளது என்கின்றனர் அன்வர் ராஜா ஆதரவாளர்கள்.
அதிமுகவில் எம்.ஜி.ஆர். காலம் முதல் அடிமட்ட தொண்டனாக அரசியலில் காலடி வைத்து ஊராட்சி ஒன்றியத் தலைவர், மாவட்டச் செயலாளர், எம்எல்ஏ , தமிழக அமைச்சர், எம்.பி என படிப்படியாக உயர்ந்தவர் அன்வர் ராஜா. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுகவில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்பவர். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மீண்டும் எம்.பி.பதவியை தக்க வைக்க கடுமையாக போராடியும் கிட்டாமல் போய்விட்டது.
அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து ராமநாதபுரம் தொகுதியை பாஜக தட்டிப்பறித்து விட்டது. இதனால் எம்.பி.பதவி பறிபோன அதிருப்தியிலும், விரக்தியிலும் அன்வர் ராஜா உள்ளார். தொகுதியில் கணிசமான அளவில் உள்ள முஸ்லீம் வாக்காளர்களும் பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த அதிருப்தி பாஜகவின் வெற்றி வாய்ப்பை பாதித்து விடுமோ என்ற கவலையில் பாஜக உள்ளது. மேலும் இதே ராமநாதபுரம் பிரச்னையில் தான் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனும் திமுக பக்கம் சாய்ந்தார். அது போன்று அன்வர் ராஜாவும் ஏதேனும் அதிரடி காட்டுவாரோ? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த வேளையில் தான் இந்த சிபிஐ நடவடிக்கை என்கின்றனர் அதிமுகவில் உள்ள அன்வர்ராஜா விசுவாசிகள்.