சேது சமுத்திர திட்டம் : மோடி என் பேச்சை கேட்டிருந்தால் மு.க.ஸ்டாலின் கைதாகியிருப்பார் - சு.சுவாமி உதார்
சேது சமுத்திர திட்ட விவகாரத்தை உச்ச நீதிமன்றமே மூடிவிட்டது. அப்போதே மோடி என் பேச்சை கேட்டு ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவித்திருந்தால் தற்போது திமுக தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டம் குறித்து கூறிய காரணத்திற்காக மு.க.ஸ்டாலினை கைது செய்ய வைத்திருப்பேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி உதார் விட்டுள்ளார்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலம் முதல் சுப்பிரமணியன் சுவாமி என்றாலே சர்ச்சை சாமிதான். ராஜீவ் கொலை, விடுதலைப் புலிகள் விவகாரம், ஜெயலலி மீதான ஊழல் புகார் என எப்போதும் ஏதேனும் ஒரு சர்ச்சையின் நாயகனாகவே இருந்து வருகிறார். தற்போது பாஜகவில் இருந்தாலும், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை விமர்சித்துத் தான் வருகிறார். ஆனால் அவர்கள் சு.சாமியை ஜோக்கராகவே பார்க்கின்றனர். அப்படிப்பட்ட சுப்பிரமணியன் சாமி தற்போது மு.க.ஸ்டாலினை கைது செய்ய வைத்திருப்பேன் என ஒரு உதார் ஜோக் அடித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்காக திமுக சார்பில் தேர்தல் அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் மத்தியில் திமுக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார.
திமுகவின் இந்த அறிவிப்பு குறித்து,மீண்டும் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவோம் என திமுக உறுதியளித்துள்ளதே என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் ட்விட்டரில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி `தி.மு.க.வுக்கு அறிவு என்பதே இல்லை. சேது சமுத்திர திட்ட விவகாரம் உச்சநீதிமன்றத்தால் மூடப்பட்டுவிட்டது. என் ஆலோசனைப்படி, ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக மோடி அறிவித்திருந்தால், பழங்கால சின்னங்களை அவமதித்த குற்றச்சாட்டில் மு.க.ஸ்டாலினை கைது செய்ய வைத்திருப்பேன்'' என்று காட்டமாகப் பதிலளித்துள்ளார்.