ஜெயலலிதா கைரேகை போலி...!திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு
2016-ல் திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்றும், அவருக்காக படிவத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்தது போலியானது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
2016-ல் தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எஸ்.எம். சீனிவேல் பதவிப் பிரமாணம் ஏற்கும் முன்னரே திடீர் மரணமடைந்தார். இதனால் 2016 அக்டோபரில் திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதிமுக சார்பில் ஏ.கே.போஸ், திமுக சார்பில் சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிட்டனர்.
இந்த இடைத் தேர்தலின் போது அதிமுக பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் வேட்பாளர் அங்கீகார படிவத்தில் அதிமுக வேட்பாளருக்காக ஜெயலலிதாவின் கைரேகை வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார்.
ஆனால் ஜெயலலிதாவின் கைரேகையில் சந்தேகம் கிளப்பிய திமுக வேட்பாளர் டாக்டர் .சரவணன் ஏ.கே.போஸ் வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்.ஜெயலலிதா வைத்ததாக கூறப்படும் கைரேகையில் உயிரோட்டம் இல்லை என்பதற்கு மருத்துவ ரீதியிலான ஆதாரங்களையும் டாக்டர் .சரவணன் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ வான ஏ.கே.போஸ் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மரணமடைந்து விட்ட நிலையில் இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது மக்களவை பொதுத்தேர்தலுடன் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்தும், தீர்ப்பை உடனடியாக அறிவிக்க கோரியும் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். உடனடியாக தீர்ப்பு வழங்காவிட்டால் வழக்கை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்த நிலையில் இன்று இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
ஜெயலலிதாவின் கைரேகையில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய நீதிபதி, அதிமுக எம்எல்ஏவாக ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதையும் செல்லாது என்று தீர்ப்பளித்தார். பரபரப்பான இந்தத் தீர்ப்பால் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உடனடியாக இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.