ஒட்டகங்கள் ஏமாறலாம் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் - ராமதாஸ் தாக்கு

பாறாங்கல் அளவுக்கு கட்டண உயர்வை சுமத்திய அரசு கடுகளவிற்கு குறைத்தது போன்ற ஏமாற்று வேலைகளுக்கு ஒட்டகங்கள் வேண்டுமானால் ஏமாறலாம் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புறநகர் பேருந்துகளில் கிலோமீட்டருக்கு 2 காசுகள் முதல் 10 காசுகள் வரை கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது. இது 3 விழுக்காடு முதல் 7 விழுக்காடு வரையிலான கட்டணக்குறைப்பு ஆகும். அதேபோல் நகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமும் அதிகபட்ச கட்டணமும் தலா 1 ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளன.

இது 4 விழுக்காடு முதல் 2௦ விழுக்காடு வரையிலான கட்டணக்குறைப்பு ஆகும். 1௦௦ விழுக்காடு அளவுக்கு கட்டணங்களை உயர்த்திய தமிழக அரசு இப்போது 3 விழுக்காடு, 4 விழுக்காடு, 7 விழுக்காடு என்ற அளவில் கட்டணங்களைக் குறைத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற துடிக்கிறது.

பாலைவன பயணங்களின்போது ஒட்டகங்கள் மீது டன் கணக்கில் சுமைகளை ஏற்றும் அதன் உரிமையாளர்கள் ஒட்டகத்தை திருப்திப்படுத்தும் நோக்குடன் சில டப்பாக்களை மட்டும் ஒட்டகத்தின் காதுக்கு ஓசை கேட்கும் வகையில் வீசி எறிவார்கள். ஒட்டகமும் தம்மீது ஏற்றப்பட்டிருந்த சுமையில் பெரும்பகுதி குறைக்கப்பட்டு விட்டதாக நினைத்து சுமைகளை ஏற்றிக்கொண்டு வேகமாக செல்லும்.

அதேபோல் தமிழக மக்கள் மீது பாறாங்கல் அளவுக்கு கட்டண உயர்வை சுமத்திய தமிழக அரசு அதில் கடுகளவிற்கு குறைத்துவிட்டு மக்களுக்கு ஏதோ பெரிய நிவாரணத்தைக் கொடுத்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது. இத்தகைய ஏமாற்று வேலைகளுக்கு ஒட்டகங்கள் வேண்டுமானால் ஏமாறலாம் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்.

எனவே ஏமாற்று வேலைகளை செய்து மக்களை ஏமாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடக்கூடாது. மாறாக கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற்று நிர்வாக சீர்த்திருத்தங்களின் மூலம் அரசுப் போக்குவரத்து கழகங்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

More News >>