மல்லுக்கட்டும் கோஷ்டிகள்..! குஷ்புவுக்கு திருச்சி கிடைக்குமா? காங்கிரஸ் பட்டியலில் இழுபறி
தமிழகத்தில் மக்களவை, சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை மற்ற அனைத்து கட்சிகளும் அறிவித்து வேட்பு மனுத்தாக்கல் செய்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் இழுபறியாகவே உள்ளது. தொகுதிக்கு 10-க்கும் மேற்பட்ட கோஷ்டித் தலைகள், பிரபலங்கள் முட்டி மோதுவதே இழு பறிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டசபை சபாநாயகருமான வைத்திலிங்கம் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. ஆனால் தமிழகத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு வேட்பாளர் தேர்வு செய்வதில் டெல்லி மேலிடமே திணறிப் போயுள்ளது. கடந்த 20-ந் தேதி முதல் காலையில் வெளியாகும்... மாலையில் வெளியாகும்... என்ற தகவல் தான் வெளியாகிறதே ஒழிய பட்டியல் வெளியான பாடில்லை.
9 தொகுதிகளுக்கு 300-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு செய்து விட்டு டெல்லியில் தங்கள் கோஷ்டி தலைவர்கள் மூலம் கொடுத்து வரும் நெருக்கடியால் குமரி, விருதுநகர், தேனி, திருச்சி, கரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை இறுதி செய்ய முடியாமல் இழுபறி நீடிக்கிறது.
திருச்சி தொகுதி திருநாவுக்கரசருக்கா? குஷ்புவுக்கா? என்றும், விருதுநகரில் முன்னாள் எம்.பி. மாணிக்கம் தாகூருக்கும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் இடையே பெரும் போட்டி நடக்கிறதாம். இது போல கரூரில் ஜோதிமணி, திருநங்கை அப்சரா ரெட்டி ஆகியோரிடையே பெரும் மல்லுக்கட்டாக உள்ளதாம்.
உச்சகட்டமாக குமரி தொகுதிக்கு மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் நெருக்கடி கொடுப்பதால் இன்று மாலை அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல் மீண்டும் நாளை அறிவிக்கப்படும் என்று தள்ளிப் போயுள்ளது. ஆனாலும் வேட்பு மனு வாபஸ் வரை வேட்பாளர் குழப்பம் நீடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இது தான் காங்கிரசின் கலாச்சாரமும் கூட என்று அக்கட்சியினரே முணுமுணுக்குன்றனர்.