மாயாவதி, அகிலேஷ் உருவப்படங்களை தீயிட்டு ஹோலி கொண்டாட்டம் - உ.பி பாஜக தலைவர் மீது வழக்கு

உ.பி.யில் பகுஜன் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் பட போஸ்டர்களை தீயில் எரித்து ஹோலி கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜகவை வீழ்த்த எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி சேர்ந்துள்ளன. இந்தக் கூட்டணியால் பாஜகவின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளதால் மாயாவதி, அகிலேஷ் மீது அம்மாநில பாஜகவினர் கடும் கோபத்தில் உள்ளனர். இந்தக் கோபத்தை 2 நாட்களுக்கு முன் நடந்த ஹோலி கொண்டாட்ட்த்தில் வெளிப்படுத்தினர்.

ஹோலி கொண்டாட்டத்தின் இறுதியில் அரக்கனை தீயிட்டு கொளுத்தி மகிழ்வர். பாரபங்கி என்ற இடத்தில் இது போன்ற கொண்டாட்டத்தின் போது அகிலேஷ், மாயாவதி போஸ்டர்களை தீயில் எரித்து அவர்களுக்கு எதிரான கோஷங்களையும் பாஜகவினர் எழுப்பியுள்ளனர். உ.பி.மாநில பாஜக மூத்த தலைவர் ராம்பாபு திவேதி முன்னிலையில் நடத்தப்பட்ட இச்சம்பவம் உ.பி.யில் பெரும் சர்ச்சையானது.

இது குறித்து டுவிட்டரில் கண்டனம் தெரிவித்த அகிலேஷ், தலித் மற்றும் பிற்பட்டோருக்கு எதிரான பாஜகவின் உண்மை முகம்தான் இது என்றும், கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நசுக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நாங்கள் இருவரும் இணைந்து எதிர்ப்பதால் பாஜகவினர் ஆத்திரத்தில் உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மாயாவதி, அகிலேஷ் படங்களை தீயிட்டு கொளுத்திய சம்பவம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் திவேதி உள்ளிட்ட பலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

More News >>