முடிந்தால் என் மீது வழக்குப் போடுங்கள் - தேர்தல் பிரச்சாரத்தில் சவால்விட்ட உதயநிதி ஸ்டாலின்
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் அதிமுக பிரமுகருக்கு தொடர்பு என பகிரங்கமாக கூறுகிறேன். முடிந்தால் வழக்குப் போட்டு பாருங்கள் என்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டுப் பேசினார்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடியின் மகன் வேட்பாளராக கெளதம சிகாமணி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இன்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுக-வின் தேர்தல் அறிக்கையை பார்த்து எதிர்க்கட்சிகள் பயந்துவிட்டன. தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி மெகா கூட்டணி இல்லை மோசடிகூட்டணி. ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் போடுவதாக கூறிவிட்டு மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால் மக்களின் வங்கி கணக்கில் பணத்தை போடாமல் மோசடி செய்துள்ளார். மோடியை வீட்டுக்கு அனுப்பி விட்டு திமுக கூட்டணி சார்பில் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க வேண்டும்.
மோடியின் அடிமைகளாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் உள்ளனர். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி வழக்கே சாட்சி. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் அதிமுக பிரமுகருக்கு தொடர்பு உள்ளது. இதை பகிரங்கமாக கூறுகிறேன் முடிந்தால் வழக்கு போட்டு பாருங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டு பேசினார்.