ராமநாதபுரமா.. கமலின் சர்ப்ரைஸ்...எகிறும் பட்டியல் எதிர்பார்ப்பு
மக்களவை தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
இந்தியக் குடியரசு கட்சியுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 20ம் தேதி வெளியானது. 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் மத்திய சென்னையிலும், முன்னாள் காவல்துறை அதிகாரி மவுரியா வட சென்னையிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், வெளியான பட்டியலில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி உட்படப் படித்த பட்டதாரிகள் அதிகம் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில் மீதமுள்ள 19 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலைக் கமல் இன்று வெளியிடுகிறார். கோவை கொடிசியாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். இதில், முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முக்கியமானவர்கள் இடம்பெறுவார்கள் என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். அதோடு, தேர்தல் அறிக்கையும் வெளியாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கமல்ஹாசனின் சொந்த மாவட்டமான ராமநாதபுரம் தொகுதி சார்பாக கமல் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக கூட்டணி கட்சியான பாஜக, திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறது. ராமநாதபுரம், கமலின் தேர்வாக இருந்தால் போட்டி கடுமையாக இருக்கும்.