தென்காசி, சிவகங்கை தொகுதிகள்... திமுக, காங்கிரஸ் இடையே பரிமாற்றமா..

திமுக கூட்டணி சார்பாக சிவகங்கை மற்றும் தென்காசி தொகுதிகள் கடைசி நேரத்தில் பரஸ்பரம் காங்கிரசும் திமுகவும் மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது திமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தென்காசி தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக தனுஷ் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் சார்பில் மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் சிவகங்கை வேட்பாளர் அறிவிப்பதில் இந்த நேரம் வரை இழுபறி நீடிக்கிறது. ப.சிதம்பரம் தரப்பில் தனது மகனுக்கோ, மருமகளுக்கோ சீட் வேண்டும் என விடாப்பிடியாக இருக்க, மற்றொரு பக்கம் சோனியா குடும்பத்துக்கு வேண்டப்பட்டவரான சுதர்சன் நாச்சியப்பன் மல்லுக்கட்டுகிறார்.

காங்கிரஸ் மேலிடமோ ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற கொள்கையைக் கூறி ப.சிதம்பரம் கழற்றி விடப் பார்க்கிறதாம். அப்படியானால் சுதர்சன் நாச்சியப்பனின் அண்ணன் மகன் தானே மாணிக்கம் தாகூர். அவருக்கு விருதுநகர் கொடுத்து விட்டு சுதர்சனுக்கும் சிவகங்கையா? என்று ப.சிதம்பரம் தரப்பு எதிர்வாதம் செய்ய காங்கிரஸ் மேலிடமோ மொத்தமாகவே சிவகங்கையை கை கழுவி விடும் முடிவுக்கு வந்து விட்டதாக பகீர் தகவல் கசிய ஆரம்பித்துள்ளது.

திமுக தரப்பும் சிவகங்கை தொகுதியை ராஜகண்ணப்பனுக்காக எதிர்பார்க்கிறதாம். எச்.ராஜாவை திமுக வேட்பாளரைக் கொண்டு எதிர்த்தால் எளிதில் வெற்றி என்றும் நம்புகிறதாம். இதனால் தென்காசி தெரகுதியை காங்கிரசுக்கும், சிவகங்கையை திமுகவுக்கும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளலாமா? என்ற அளவில் ஒரு பக்கம் பேச்சு நடந்து வருகிறதாம். இன்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேட்பாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததும் தொகுதி பரிமாற்றம் பற்றிய பேச்சுவார்த்தைக் குத்தான் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

More News >>