சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டி - முடிவுக்கு வந்தது இழுபறி
சிவகங்கை தொகுதிக்குக் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடித்த நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரி தொகுதியிலும் போட்டியிடுகிறது. முன்னதாக, திருவள்ளூர்,விருதுநகர் , தேனி, திருச்சி , கரூர் , கிருஷ்ணகிரி , ஆரணி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இழுபறி நீடித்து வந்தது.
சிவகங்கை தொகுதியில் போட்டியிட, ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் புஷ்பராஜின் மகனான டாக்டர் அருண் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இவர்களுக்கிடையில் கடும் போட்டி நிலவியது.
இதனால், வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடித்து. இந்நிலையில், சிவகங்கை தொகுதி வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.