ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி - வைகோ அறிவிப்பு

ஈரோடு மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 24 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னம் களம் காண்கிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் கை சின்னத்தில் போட்டியிடுகிறது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா இரு தொகுதிகளில் அவரவர் கட்சி சின்னத்தில் போட்டியிடுகின்றன. விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் தனிச் சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ராமநாதபுரம் தொகுதியில் ஏணிச் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடுகிறது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளான இந்திய ஜனநாயகக் கட்சி பெரம்பலூரிலும், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி பொள்ளாச்சியிலும் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியாடுகின்றன. தற்போது ஈரோட்டில் மதிமுகவும் திமுகவின் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், திமுக போட்டியிடும் 20 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 24 தொகுதிகளில் உதய சூரியன் சின்னம் களம் காண்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>