அமமுக இறுதி வேட்பாளர் பட்டியல், ஓசூரில் கர்நாடக மாநில பொறுப்பாளர் புகழேந்தி போட்டி
அமமுகவின் இறுதி வேட்பாளர் பட்டியலை தினகரன் வெளியிட்டுள்ளார்.ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அமமுக கட்சியின் கர்நாடக மாநில பொறுப்பாளர் புகழேந்தியை களம் இறக்கியுள்ளார் தினகரன்.
தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளில் ஒரு தொகுதியை மட்டும் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒதுக்கி விட்டு 38 தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது. 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவே போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இரண்டு கட்டமாக வெளியிடப்பட்ட நிலையில் ஓசூர் சட்டப் பேரவைக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இன்று ஓசூர் தொகுதி வேட்பாளராக கர்நாடக மாநில அமமுக பொறுப்பாளர் புகழேந்தியை களம் இறக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு அம்மாநில அமமுக இளைஞரணிச் செயலாளர் என்.தமிழ்மாறன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஞான. அருள்மணி மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக மைக்கேல் ராயப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சினிமா தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பன் தேமுதிக சார்பில் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதன் பின் அதிமுகவில் இணைந்து தற்போது தினகரன் பக்கம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.