திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி தேர்தல் வழக்கு - 28-ந் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக் கோரி திமுக தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.வரும் 28-ந் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக இருந்த 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவைத் தேர்தலுடன் ஏப்ரல் 18-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் உள்நோக்கம் இருப்பதாகவும், 3 தொகுதிகளுக்கும் சேர்த்தே இடைத் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15-ந் தேதி வழக்குத் தொடரப்பட்டது. இதற்கு பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க திமுக தரப்பில் இன்று கோரிக்கை விடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் வரும் 28-ந் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.