தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
பொதுப்பட்டியலில் உள்ள குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வேறு சின்னம் ஒதுக்குவது தொடர்பான உத்தரவை இன்றே பிறப்பிக்குமாறு தினகரன் தரப்பில் முறையிடப்பட்டதற்கும் தேர்தல் ஆணையம் உரிய பதிலளிக்காததால் விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மேல் முறையீடு செய்திருந்தார். பொதுத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் நடப்பதால் அவசர வழக்காக விசாரித்து சின்னம் ஒதுக்குவது தொடர்பாக உத்தரவிடுமாறு தினகரன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கில் குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக இன்றைக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தனி நபர், பதிவு பெற்ற கட்சிகளுக்கு மட்டுமே பொதுப் பட்டியல் சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் பதிலளித்தது
தினகரனின் அமமுக தனிநபர் கட்சியோ, பதிவு பெற்ற கட்சியோ அல்ல என்பதால் பொதுப் பட்டியலில் உள்ள குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து விட்டது.
வேட்பு மனுத்தாக்கல் நாளை முடிவடைவதால், அமமுகவுக்கு வேறு சின்னம் ஒதுக்குவது தொடர்பான உத்தரவை இன்றே பிறப்பிக்க வேண்டும் என்ற தினகரன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கும் தேர்தல் ஆணையம் சரிவர பதிலளிக்காததால் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.