வைரலாகும் பதிவு: அடையாளம் தருகிறது வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் தனது பீட்டா வடிவத்தில் பல்வேறு புதிய அம்சங்களை பரீட்சித்து வருகிறது. சில மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தல்களுடன் அவை பயன்பாட்டு வந்து சேர்கின்றன. அந்த வகையில் பொய் செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் வண்ணம் வாட்ஸ்அப் புதிய முயற்சி ஒன்றை பரீட்சித்து வருகிறது.
பதிவு பகிரப்படும் எண்ணிக்கை
வாட்ஸ்அப்பின் 2.19.80 பீட்டா மேம்படுத்தப்பட்ட வடிவில் ஒரு பதிவு எத்தனை முறை பகிரப்பட்டுள்ளது (ஃபார்வேர்டு) என்ற எண்ணிக்கையை அறிந்து கொள்ள முடியும். பதிவின் தகவல் (Info) பகுதியில் முன்பு, சென்று சேர்ந்தது (delivered), படிக்கப்பட்டது (read) என்ற விவரங்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். புதிய வடிவத்தில் அந்தப் பதிவு எத்தனை முறை ஃபார்வேர்டு செய்யப்பட்டுள்ளது என்ற எண்ணிக்கையும் தெரிய வரும்.
தற்போது பகிரப்படும் பதிவு (forwarded) என்று அடையாளப்படுத்தப்படுகிறது. அதேபோன்று அடிக்கடி பகிரப்படும் பதிவு (frequently forwarded) என்று அடையாளப்படுத்தப்படும். இப்படி அடையாளப்படுத்துவதன் மூலம் பரபரப்பாக பகிரப்படும் செய்தியாக ஒரு பதிவை இனங்கண்டுகொள்ள முடியும்.
வர்த்தக பயனர்கள்
வர்த்தக பயனர்கள் (Business useres) என்ற புதிய அம்சத்திற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இது நடைமுறைக்கு வரும்போது வர்த்தக நிறுவனங்கள் தங்களைப் பற்றிய தகவலை பார்க்கக்கூடிய குறுகிய இணைப்பை (shorten link) பகிர முடியும். வர்த்தக வடிவமைப்பு (Business Settings) என்ற வகைப்பாட்டின் கீழ் வரும் பயனர்களுக்கு மட்டும் இந்த வசதி கிடைக்கும். அந்த இணைப்பின் மூலம் வாட்ஸ்அப் தளத்திலேயே வாடிக்கையாளர்கள் உரையாட முடியும். இந்த வர்த்தக இணைப்பை பகிரவும் முடியும்.