டிடிவி தினகரனின் ஜாக்பாட் தொகுதி குமுறலில் அதிமுக...திமுக...பரபரக்கும் தேர்தல் ரிப்போர்ட்

தமிழகத்தில், தேர்தல் நெருங்கிவிட்டது. தேர்தல் களமும் விறுவிறுப்பாக நகர்கிறது. அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் கடந்த வாரம் வெளியாகியது. ஆனால், திமுக கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிப்பதில் சுணக்கம் காட்டியது. தொகுதி சீட்டுக்காக உட்கட்சி தலைவர்கள் அடித்துக்கொண்டதே தாமதத்திற்கான காரணம் என்று சொல்லப்பட்டது. சீட்டுக்காக, சென்னை டூ டெல்லிக்குப் பறந்து அலைந்தனர் முக்கிய காங்.,புள்ளிகள்.

வேட்பாளர்களை முடிவு செய்ய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் பலகட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இரவு பகலாக நடந்த கூட்டத்தில், முட்டல் மோதல்களுக்கு இடையில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். இருப்பினும், சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவிப்பதில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது.

அதிமுக, கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிடும் பாஜகவுக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டது. இங்கு, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா போட்டியிடுகிறார். அமமுக சார்பில் வி.பாண்டி, மக்கள் நீதி மய்யம் சார்பில் பிக்பாஸ் புகழ் சினேகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ் வேட்பாளராக கார்த்திக் சிதம்பரம் நேற்று அறிவிக்கப்பட்டார்.

கார்த்திக் சிதம்பரம் VS ஹெச்.ராஜா

கடந்த 2014ல் நடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்த்திக் சிதம்பரம் நான்காவது இடத்தை பிடித்தார். தற்போது, மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விடக் கணிசமான வாக்குகளை மட்டுமே அதிகமாக பெறுவார் எனக் கூறப்படுகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டு பதவிகள் வழங்கப்படாது என்று காங்கிரஸ் அறிவித்திருந்தது. ஏற்கனவே, மாநிலங்களவை  எம்.பியாக  ப.சிதம்பரம் இருக்கிறார். எப்படி, அவரின் மகனுக்குத் சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதுவே, கார்த்திக் சிதம்பரத்துக்குச் சறுக்கலாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மேலும், அவர் மீது சுமத்தப்பட்ட உழல் குற்றங்களும் இந்த தேர்தலில் எதிரொலிக்கும். 

அதிமுக vs அமமுக

சிவகங்கையில் பல்வேறு ஜாதி கட்டுமான அமைப்புகள் உள்ளன. இதில், அகமுடையார்கள் மிகவும் வலிமையான அமைப்பாக உள்ளனர். எனவே, சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி காண்பது கடினம். கார்த்திக் சிதம்பரத்துக்குக் கடுமையான போட்டியாளராக ஹெச்.ராஜா இருப்பார். காங்கிரஸ் விக்கெட்டை எளிதில் எடுத்துவிடுவார். ஆனால், அமமுக வேட்பாளர் வி.பாண்டியை எதிர்கொள்வது அவருக்குக் கடினம். சர்ச்சையின் நாயகனாக வலம்வரும் ஹெச்.ராஜா-வின் வெற்றி நூலிழையில் பறிபோகவும் வாய்ப்பு உள்ளது.

இத்தொகுதியைச் சேர்ந்த இளையான்குடியில் சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கின்றனர். அதிமுக-பாஜக கூட்டணியை விரும்பாத இவர்களின் வாக்குகள் சிதறும் நிலை உள்ளது. இது அமமுகவுக்குக் கூடுதல் வாய்ப்பாகும். 

இதனிடையில், அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வருவோம்  என்ற  டேக்  லைனுடன்  தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம், சார்பில் பிக்பாஸ் புகழ் சினேகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரின் செல்வாக்கு தேர்தலில் எடுபடாது என அரசியல் நோக்கர்கள் கருத்து  தெரிவிக்கின்றனர்.

 

More News >>