தலைமை எடுத்த முடிவை விமர்சிப்பது அழகல்ல... சுதர்சன நாச்சியப்பனுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்
சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்தை வேட்பாளராக அறிவித்த கட்சித் தலைமையின் முடிவை சுதர்சன நாச்சியப்பன் விமர்சிப்பது அழகல்ல என்றும், தற்போது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் கார்த்தி சிதம்பரம் மீதா? அல்லது கட்சித் தலைமை மீதா? என்பதை சுதர்சன் நாச்சியப்பன் ஒரு முறை யோசிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை தொகுதிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பெயர் நீண்ட இழுபறிக்குப் பின் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ப.சிதம்பரம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது சுதர்சன் நாச்சியப்பன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தது காங்கிரசில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதர்சன் நாச்சியப்பனின் இந்தக் குற்றச்சாட்டுகள் க்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்பு இருமுறை என்னை வேட்பாளராக அறிவித்து பிறகு மாற்றிய வரலாறு ஏற்கனவே உண்டு
காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணியில் 9 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலிடம் ஆராய்ந்து முடிவு செய்து வேட்பாளர்களை அறிவிக்கும் போது மற்றவர்களுக்கு வருத்தம் வரத்தான் செய்யும்.
காங்கிரசில் தகுதி வாய்ந்த தலைவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.சுதர்சன நாச்சியப்பன் தகுதியானவர். ஆனால், கட்சி தலைமை எடுத்த முடிவை ஏற்க வேண்டும்.
தற்போது விமர்சிப்பது கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராகவா ? அல்லது கட்சித் தலைமையையா ? என்பதை ஒரு முறை சுதர்சன் நாச்சியப்பன் யோசிக்க வேண்டும்.
சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக 8 விருப்ப மனுக்கள் வந்திருந்தன.அதன் பேரில் நீண்ட ஆலோசனைக்குப் பின்னரே கட்சித் தலைமை கார்த்தி சிதம்பரத்தை வேட்பாளராக அறிவித்தது.
கட்சித் தலைமை எடுத்த இந்த முடிவை எதிர்ப்பது சுதர்சன நாச்சியப்பனுக்கு அழகல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.