பட்டு போன்ற மென்மையான சருமத்திற்கு...

சிலருக்கு மேற்புற தோல் அவ்வளவு பளபளப்பாக இருக்கும்! 'நமக்கும் இருக்கிறதே சுருக்கம் விழுந்து, மங்கலாக...' என்ற அங்கலாய்ப்பு உங்களுக்கு இருக்கிறதா? இதோ, உங்கள் மேனியை பளபளப்பாக பராமரிக்க எளிய வழி.

"அந்தக் கடைக்குச் செல்லுங்கள்... இந்த ஆன்லைன் ஸ்டோரில் ஆர்டர் செய்யுங்கள்" என்றெல்லாம் இல்லாமல் வீட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய பொருள்களை பயன்படுத்தி சருமத்தை பளபளப்பாக்கலாம்.

'காஃபி' எப்படியும் எல்லோர் வீட்டிலும் சுவைக்கும் பானம். நல்ல தரமுள்ள காஃபி தூளை பயன்படுத்தி போடப்படும் ஃபில்டர் காபி ரசித்து பருகாதோர் எவருமில்லை. உங்கள் வீட்டில் டிகாஷன் இறக்கிய பிறகு கிடைக்கும் காஃபி பொடியை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தப்பட்ட காஃபி தூளை இரண்டு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு தேக்கரண்டி (டீ ஸ்பூன்) அரைத்த லவங்கபட்டை தூளை சேர்த்துக்கொள்ளுங்கள். அதன் மேல் சீனி என்னும் சர்க்கரையை சிறிதளவு தூவி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இக்கலவையுடன் தேங்காயெண்ணெய் சேர்த்து கலக்கினால், பசை போன்ற பொருள் கிடைக்கும். இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து அரைமணி நேரம் வைத்து விடுங்கள்.

பின்னர், உடல் எங்கும் தண்ணீர் படுமாறு குளித்துவிட்டு, தயாரித்த காஃபி தூள் கலவையை மெதுவாக பூசுங்கள். அழுத்தி தேய்க்காமல், வட்ட வடிவமாக மெதுவாக பூசவும். சதைப்பற்று மிகுந்த முன்கை மற்றும் தொடை பகுதிகளில் அதிக கவனம் எடுத்து நன்றாக பூசுங்கள். மூன்று நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் நன்கு குளிக்க வேண்டும். தேங்காயெண்ணெயை நீக்குகிறேன் என்று வேறு எதுவும் பயன்படுத்தவேண்டாம். வெறும் நீரில் குளித்தால் போதும்.

வாரத்திற்கு இருமுறை இப்படி செய்து பாருங்கள்; உங்கள் கண்களையே உங்களால் நம்ப இயலாது. சருமம் அவ்வளவு வனப்பு பெறும்.

காஃபி தூளில் உள்ள 'காஃபைன்' என்ற பொருளுக்கு பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படும் ஆன்ட்டிஃபங்கல் மற்றும் ஆன்ட்டிபாக்டீரியல் பண்புகள் உண்டு. இது சருமத்தில் கிருமி தொற்று ஏற்படாமல் காக்கும். சருமத்தில் ஏற்கனவே இருக்கும் சிறு காயங்கள் விரைவாக ஆறவும் இது உதவும். காஃபி கொட்டையிலுள்ள ஆக்சிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடண்ட்டுகள் சருமத்திற்கு நன்மை செய்யக்கூடியவை. சருமத்தின் மீது காஃபி தூளை பூசினால் இரத்த ஓட்டம் தூண்டப்படும்; இரத்த ஓட்டம் அதிகமாகும்போது சருமம் மிளிரும். தோலில் தடிப்பு மற்றும் கணுக்கால் போன்ற இணைப்பு மற்றும் மூட்டுப் பகுதிகளில் வீக்கம் ஏற்படாமல் சருமத்தை இறுக்கமாக பராமரிக்க காஃபி தூள் உதவுகிறது.

இயற்கையான இந்த முறையில் செலவு மற்றும் பக்க விளைவுகள் இன்றி பளபளப்பான சருமத்தை பெறுங்கள்!

More News >>