டெக்னாலஜிக்கு மாறிய எடப்பாடி.... - கமல், அன்புமணி பாணியில் பிரச்சாரத்தில் புதிய யுக்தி
அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக தீவிர பிரச்சாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கடந்த இரண்டு தினங்களாக சேலம், வேலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் வாக்கு சேகரித்தார்.
அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜூக்கு ஆதரவாக வடசென்னை பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட போது அவரின் தோற்றம் மக்களை கவர்ந்தது. கடந்த இரண்டு தினங்களாக பிரச்சாரத்துக்கு சாதாரண வகை மைக்கை பயன்படுத்தி வந்த நிலையில், இன்று நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மைக்கை முதலமைச்சர் பழனிசாமி பயன்படுத்தினார். காதில் பொருத்திக்கொள்ளும் வகையிலான கார்ட்லஸ் மைக்கைப் பயன்படுத்தி பிரசாரம் செய்தார்.
மோகன்ராஜை ஆதரித்து ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். இந்த இடங்களில் எல்லாம் கார்ட்லஸ் மைக்கையே அவர் பயன்படுத்தினார். இதுவரை கமல்ஹாசன், அன்புமணி போன்ற அரசியல்வாதிகள் தான் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது எடப்பாடியும் இந்த தொழில்நுட்பத்தில் வாக்கு சேகரிக்க தொடங்கியிருக்கிறார்.