அதிமுக 4 எழுத்து ... தேமுதிக 4 எழுத்து... கிடைத்ததும் 4 தொகுதிகள் -பிரேமலதா வர்ணனை
அதிமுக தலைமையிலான கூட்டணி ராசியான கூட்டணி என்றும் வெற்றிக் கூட்டணி என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பெருமையாக கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் திருச்சி மக்களவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் டாக்டர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் இன்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், எம்ஜிஆரை தனது ரோல் மாடலாக கொண்டவர் விஜயகாந்த். இந்தக் கூட்டணி ராசியான கூட்டணி. அதற்குச் சாட்சி தான் 2011-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் என்றார்.
அதிமுக என்பது 4 எழுத்து, தேமுதிக எமன்பதும் 4 எழுத்து. நமக்கு கிடைத்திருக்கும் இடங்களும் 4 என்று குறிப்பிட்ட பிரேமலதா இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்றும்,எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என மூவருமே திரைத்துறையிலிருந்து வந்து அரசியலில் சாதித்தவர்கள் என்றார்.
தேமுதிக, அதிமுக, பாஜக கட்சிகளில் உள்ள அனைவருமே பக்திமான்கள். பக்தி இருக்குமிடத்தில் பணிவும், துணிவும் இருக்கும்.எதிரணியினர் சாமி இல்லை என்று சொல்லிக்கொண்டே, கொல்லைப்புறம் வழியாக கடவுளை வழிபடக்கூடியவர்கள் என்று விமர்சித்தார்.
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை கை விரலை உயர்த்தி காட்டுவர். அந்த இரட்டை விரலில் விஜயகாந்தின் முதல் எழுத்தான 'V' உள்ளது. அது வெற்றியை குறிக்கும்.இறுதிவரை கூட்டணி தர்மத்திற்காக பாடுபடும் கட்சி தேமுதிக.எதிரணியால் பிரதமர் வேட்பாளரை கூட சொல்ல முடியாது.ராகுல்காந்திக்கும், நரேந்திரமோடிக்கும் உள்ள வித்தியாசம் மடுவுக்கும்,மலைக்கும் உள்ள வித்தியாசம் என்றார் பிரேமலதா
அமெரிக்காவில் விஜயகாந்த் சிகிச்சையில் இருந்தபோது உடல் நிலை நன்கு தேறி வந்தது. இதுபோன்ற மருத்துவ சிகிச்சை ஜெயலலிதாவிற்கும் வழங்கியிருந்தால் அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருப்பார் என்று அப்போது நாங்கள் நினைத்தோம் என்றும் பிரேமலதா பேசினார்.