குரங்கு தன் குட்டியை விட்டுதான் ஆழம் பார்க்கும் -மனநல மருத்துவரை சாடும் நாம் தமிழர் கட்சி....

நாம் தமிழர் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் 20 பெண் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளது. பெரும்பாலானோர் இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், சிலர் மாறுபட்ட கருத்துகளையும் வெளியிட்டுள்ளனர் . இந்த நிலையில் மருத்துவர் ஷாலினி, வெளியிட்ட முகநூல் பதிவு கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

நாம் தமிழர் கட்சி அறிவித்திருக்கும் பெண் வேட்பாளர்களின் படங்களைப் பகிர்ந்துகொண்டு 'ரசிக்கும்படியாக பேசும் ஆண்களின் பின்னால் பெண்கள் போவது மானுடத்தின் சோகம்' என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவைக் கண்ட நாம் தமிழர் கட்சியினர் சில மணித்துளிகளில் அவர்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவரின் கருத்துக்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், #ShameonyouShalini உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியாகியுள்ளது.அதில், ''பெண் ஊடகவியலாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகருக்கு இருந்த வக்கிரப் பார்வைக்குச் சற்றும் சளைத்ததல்ல மருத்துவர் ஷாலினியின் அபத்தப் பதிவு. தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்திய (மனநல) மருத்துவர் ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். தவறும் பட்சத்தில் சட்டரீதியாக இப்பிரச்சினையை கொண்டு செல்வோம். இதுபோன்ற கீழ்த்தரமான சிந்தனைகளை சகித்துக்கொள்ள முடியாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன் பதிவுக்கு எதிராக எழுதிக்கொண்டிருப்பவர்களுக்குப் பதிலாக, தான் சொன்னதைத் தவறாகப் புரிந்துகொண்டவர்களுக்கு, " குரங்கு தன் குட்டியை விட்டுதான் ஆழம் பார்க்கும். நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளில் பெண்களுக்கு 50% பங்களிப்பு இல்லை. ஆனால் 50% பெண் வேட்பாளர் அறிவிப்பு ஆழம் பார்க்கும் அரசியல்.....” என்கிற இன்னொரு பதிவையும் பதிந்துள்ளார் மருத்துவர் ஷாலினி .

#ShameonyouShalini எனும் தலைப்பில் சமூக ஊடகங்களில் அவர் மீதான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

More News >>