மோடிக்கு 111... சந்திரசேகர ராவுக்கு 200.... - மக்களவை தேர்தலில் ரவுண்டு கட்டி அடிக்கும் விவசாயிகள்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு. காவிரி பிரச்னை முதல் விவசாயிகளின் கடன் தொல்லை பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்தினார். தமிழக விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க பிரதமர் மோடி எங்களை அழைத்துப் பேச வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி வீதிகளில் அய்யாக்கண்ணு நடத்தாத நூதனப் போராட்டம் 100 நாட்களுக்கு மேல் சென்றது. கோவணத்துடன் பல நாட்கள் போராடிய இவர்களை இறுதி வரை மத்திய அரசும், பிரதமர் மோடியும் கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியில் தமிழக விவசாயிகள் 111 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்யப் போகிறோம் அய்யாக்கண்ணு அறிவித்தார். இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து மோடியின் அதிகாரிகள் சமரசம் பேசிவருகின்றனர் என அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதேபோன்ற இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம் நிஸாமாபாத் தொகுதியில் எம்.பியாக இருக்கும் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, தற்போது மீண்டும் அதே தொகுதியில் தற்போது போட்டியிடுகிறார்.

இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில், சுமார் 200 விவசாயிகள் அந்த தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று மாலை வரை நீண்ட வரிசையில் நின்று வேட்புமனுவை தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளனர். மத்திய அரசு மற்றும் மாநில அரசு விவசாயிகளை வஞ்சிப்பதாக கூறி, அந்தத் தொகுதியைச் சேர்ந்த பல விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் விவசாயிகளை பாஜக துண்டிவிட்டுள்ளதாக கவிதா குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>