சச்சின் என் வேலையை குறைத்துவிட்டார்... - ஓய்வு குறித்து யுவராஜ் சிங் உருக்கம்
ஐபிஎல்லின் நேற்றைய ஆட்டத்தில் ரிஷப் பான்ட்டின் அதிரடியால் மும்பை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்த தொடரை நம்பிக்கையுடன் துவங்கியுள்ளது டெல்லி கேபிட்டல்ஸ். இந்த போட்டி ஆரம்பம் முதலே எதிர்ப்பார்ப்போடு இருந்தது. காரணம் தவான் ஹைதராபாத் அணியில் இருந்து டெல்லிக்கு வந்தது, இந்திய அணியிலும், ஐபிஎல் ஏலத்தில் முதல் சுற்றிலும் இடம் பெற முடியாமல் கடைசி நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடிப்படை விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட யுவராஜ் சிங் ஆகியோர் எப்படி ஆடப்போகிறார்கள் என்பது தான். ஆனால் இருவரும் சிறப்பாகவே விளையாடினர். இந்த ஆட்டத்தில் மும்பை தோற்றாலும் யுவராஜ் அதிரடியாக ஆடி அரைசதமடித்தார். 35 ரன்னில் 53 ரன்களை குவித்தார் யுவராஜ்.
போட்டிக்கு பின் இதுகுறித்து பேசிய யுவராஜ் சிங், ``கடந்த 2 ஆண்டுகளாக என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்து வருகின்றன. இதனால், தெளிவான முடிவு எடுக்கமுடியாமல் நான் இருந்து வருகிறேன். ஆனாலும் நான் கிரிக்கெட்டை விடவில்லை. நான் 14,16 வயதுகுட்பட்ட கிரிக்கெட்டிலிருந்து ஆடி வருகிறேன். எனக்கு கிரிக்கெட் தான் எல்லாம். என்னால் கிரிக்கெட் ஆட முடியும் என்ற நம்பிக்கை உள்ள வரை ஆடுவேன். எனக்கு நானே ஆய்வு செய்து கொண்டதில் இன்னும் சில காலம் கிரிக்கெட் போட்டியில் விளையாடலாம் என எனக்குத் தோன்றியது. அது 16 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி அதை அனுபவித்து விளையாடுவேன்.
தேசிய கிரிக்கெட் அணியை பற்றி நான் நினைக்கவில்லை. எல்லோரும் ஓய்வு குறித்து கேட்கிறார்கள். சரியான நேரம் வரும்போது, ஓய்வு அறிவிப்பை நான்தான் முதலில் அறிவிப்பேன். யாரும் என் ஓய்வு குறித்து எனக்கு யாரும் நெருக்கடி கொடுக்காதவகையில் ஓய்வை அறிவிப்பேன். என்னுடைய ஓய்வு குறித்து குழப்பமான சூழல் இருந்தபோது, நான் சச்சினுடன் பேசினேன். அப்போது பல்வேறுவிதமான தெளிவான விஷயங்கள், ஆலோசனைகள் எனக்கு கிடைத்தன சச்சினுடன் பேசியது தான் என்னை 37, 38 வயதில் கிரிக்கெட் ஆடும் உத்வேகத்தை தந்தது" எனப் பேசியுள்ளார்.