பிரசாரத்திற்கு பலம் ஜெயலலிதா தான்! - தடுமாறும் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்
தேர்தல் களத்தில் ஜெயலலிதா போன்ற மக்களின் மனம் கவர்ந்த தலைவரின் பிரச்சாரப் பலம் இல்லாததால், அதிமுகவுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக கட்சி தொண்டர்கள் கலக்கமடைந்துள்ளனர் .
நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் அதிமுக தனது ஆட்சியைத் தக்கவைக்க 18-ல் குறைந்தபட்சம் 6 தொகுதிகளில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக-அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இத்தொகுதிகளில் அமமுக வேட்பாளர்களும் அதிமுகவுக்கு கடும் சவாலாகத் திகழ்கின்றனர். ஆளும் கட்சி என்ற அதிகார பலம், பண பலம், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு வெற்றிக்கு கைகொடுக்கும் என்று அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர். அதேநேரத்தில் டிடிவி தினகரன் பேச்சு மக்களை ஈர்க்கக்கூடியதாக உள்ளது.
'யாருமே இல்லாத இடத்தில்' எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலானது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் பிரசாரத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அக்கட்சி தொண்டர்களிடையே கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது . முன்பு ஜெயலலிதாவின் பிரச்சார பலம், ஒருங்கிணைந்த அதிமுகவின் வாக்கு வங்கி உள்ளிட்டவை வெற்றியைத் தேடித் தந்தது. தற்போது கட்சியின் அடிப்படை வாக்கு வங்கியுடன், வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கும் வெற்றிக்கு அவசியமாகிறது.