அமமுகவுக்கு குக்கர் மறுப்பு : வேறு பொதுச் சின்னத்தை ஒதுக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க மறுத்த உச்ச நீதிமன்றம் வேறு ஒரு பொதுச் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்றே கடைசி நாள் என்பதால் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கும் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலையே விசாரணையை தொடங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கில் காரசார விவாதம் நடைபெற்றது.
பதிவு பெறாத கட்சிக்கு குக்கர் சின்னம் வழங்க முடியாத என தேர்தல் ஆணையம் பிடிவாதம் செய்ய, நீதிபதிகளும் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அமமுக கட்சியை உடனடியாக பதிவு செய்யுமாறு நீதிபதிகள் கூற, உடனடியாக பதிவு செய்தால் இரட்டை இலை சின்னம் வழக்கில் தங்கள் தரப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்று தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் பதிவு செய்வதாக எழுத்து மூலம் உத்தரவாதம் தருவதாக தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட அதற்கும் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. ஒரு கட்சியை பதிவு செய்த உடனே சின்னம் ஒதுக்க முடியாது. 30 நாட்களுக்கு பிறகே சின்னம் ஒதுக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் வாதங்கள் நடைபெற்றது.இறுதியில் வேட்பு மனுத் தாக்கலுக்கான அவகாசம் முடிவடைய உள்ளதால், அமமுக வேட்பாளர்கள் போட்டியிடும் 40 மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 19 தொகுதிகளுக்கு வேறு பொதுச் சின்னத்தை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.