குக்கர் சின்னம் வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த காரசார வாதம்

அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் கடும் வாதம் செய்தார். அப்போது நீதிபதிகளும் சரமாரி கேள்வி கேட்டதால் வழக்கு விசாரணை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காரசார விவாதம் நடந்தது.

வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்றே கடைசி நாள் என்பதால் அமமுக கட்சிக்கு சின்னம் வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணையை முதல் வழக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணை தொடங்கியது.

அப்போது பதிவுபெறாத கட்சிக்கு பொதுச் சின்னம் வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படியெனில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கியது யார்? என்று நீதிபதிகள் சரமாரி கேள்வி கேட்டனர்.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு குக்கர் சின்னம் வழங்கியது தேர்தல் ஆணையம் வழங்கியது என தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

பதிவு பெறாத கட்சிக்கு பொதுச் சின்னம் எப்படி வழங்க முடியும் என்ற நீதிபதிகள்,பொதுச் சின்னம் வேண்டுமெனில் அமமுக கட்சியை முதலில் பதிவு செய்யுங்கள் என்றனர். அமமுகவை தனிக் கட்சியாக பதிவு செய்தால் நிலுவையில் இருக்கும் இரட்டை இலைச் சின்னம் வழக்கு நீர்த்துப் போகும் அபாயம் உள்ளது என தினகரன் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் அமமுகவை தனிக்கட்சியாக பதிவு செய்ய தற்போது அவகாசமில்லை எனவும், ஆனாலும் அமமுகவை பதிவு செய்கிறோம் என எழுத்து பூர்வமாக உத்தரவாதம் தருகிறோம் என தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 59 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் ஒதுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் இதற்கும் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. கட்சியை பதிவு செய்தவுடனே சின்னம் ஒதுக்க முடியாது. ஒரு கட்சியை பதிவு செய்து 30 நாட்கள் கடந்த பின்னர் தான் பொது சின்னம் கொடுக்க முடியும். தற்போதைக்கு உடனடியாக அமமுகவுக்கு சின்னம் கொடுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததால் வாதம் நீடித்துக் கொண்டே சென்றது.

கடைசியில் வேட்பு மனு அவகாச காலம் இன்று முடிவடைவதால் நீதிபதிகள் ஒரு முடிவுக்கு வந்தனர். தேர்தல் ஆணையம் தொடர்ந்து பிடிவாதம் காட்டியதால் குக்கர் சின்னத்தை வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், தினகரன் தரப்பு வேறு பொதுச் சின்னத்தையாவது தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அமமுக வேட்பாளர்கள் போட்டியிடும் 59 தொகுதிகளுக்கு பொது சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு சின்னம் பிரச்னைக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தனர்.

More News >>