தஞ்சை தொகுதியில் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடையாது... தேர்தல் ஆணைய நிபந்தனையால் தடை விதித்தது உயர்நீதிமன்றம்
தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் மறுக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டது.
தற்போது ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால் சைக்கிள் சின்னம் ஒதுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் தஞ்சாவூர் தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் தமாகா போட்டியிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் எனக் கோரி தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி மணிக்கு மார் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் நிபந்தனையை தளர்த்த முடியாது என்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனைகளுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிதமாகா கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
மேலும் தஞ்சை தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகாவுக்கு அனுமதி இல்லை என்றும் உயர் நீதிமன்றம் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும் நிரந்தரமாக சைக்கிள் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற மனு மீதான விசாரணையை வரும் ஜுன் மாதத்துக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம் .
தேர்தல் ஆணையத்திடன் நிபந்தனையால் சைக்கிள் சின்னம் பறிபோன தமாகா தஞ்சை தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுமா?அல்லது அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடப் போகிறதா? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.