தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த நாடார் மக்கள் சக்தி தலைவர் ஹரி நாடாரிடம் துப்பாக்கி பறிமுதல் - போலீசார் விசாரணை
தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த நாடார் சக்தி தலைவர் ஹரி நாடார் காரில் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஹரி நாடார் உள்பட 8 பேரிடம் போலீசார் விசாரணை ந|டத்தினர்.
நெல்லையில் கராத்தே செல்வின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாடார் மக்கள் சக்தி தலைவர் ஹரி நாடார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆதரவாளர்கள் 7 பேர் வரவேற்று, காரில் நெல்லைக்கு அழைத்துச் சென்றனர். தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் இந்த கார் சென்றபோது தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் காரை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது காரில் துப்பாக்கி மற்றும் 35 தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது.
காரில் ஹரிநாடாருக்கு பாதுகாப்பிற்காக வந்த முன்னாள் ராணுவ வீரரான உ.பி.யைச் சேர்ந்த நரேந்திர சிங் யாதவ் என்பவரிடம் இந்தத் துப்பாகி இருந்தது தெரியவந்தது.
தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதியில்லை என்ற காரணத்தினால், அதிகாரிகள் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், காரையும் பறிமுதல் செய்து ஹரி நாடார் உட்பட 8 பேரையும் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி முரளி ரம்பா, ரூரல் டிஎஸ்பி முத்தமிழ் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.