கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 6 பேர் பலி - ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த நெமிலியில் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியை துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கழிவு நீர் தொட்டியிலிருந்து விஷவாயு தாக்கியதில், பணிபுரிந்தவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. விஷவாயு வெளியானதைத் தொடர்ந்து, அப்பகுதியில் குடியிருப்பவர்கள் சில மணித்துளிகளில் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், கழிவு நீர் சுத்தம் செய்து கொண்டிருந்த 6 தொழிலாளர்களை வெளியே கொண்டு வந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 6 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னர் பேசிய மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி "இறந்தவர்கள் 6 பேரில் ஒரு சிலர் வட மாநிலத்தவர்கள், மேலும் மற்றவர்கள் பற்றிய முழு விவரங்கள் விசாரணைக்குப் பின் தெரிவிக்கப்படும்" எனக் கூறினார்.

பின்னர் விசாரணையில் இறந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, கண்ணன், கார்த்திக், பரமசிவன், லட்சுமிகாந்தன், சுரதாபாய் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கழிவு நீரை சுத்தம் செய்ய கழிவு நீர் தொட்டியில் இறங்கியுள்ளனர். அதனால் அவர்கள் தற்போது உயிரிழந்துள்ளனர் என போலீசார் முதல்கட்டமாக தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்ட்காட் ,உணவு விடுதி ,தனியார் தொழிற்சாலை என பல இடங்களிலும் இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நெமிலி பகுதி ஏற்பட்ட இந்த சம்பவத்தால் அங்குள்ள மக்களிடையே பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

More News >>