காவலருக்கு பயந்து ஓடிய இளைஞர் குளத்தில் தவறி விழுந்து பலியான சோகம்
காவல்துறையினரின் விசாரணைக்குப் பயந்து ஓடிய இளைஞர் ஒருவர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் சுகுமாரன். இவரும் இவரது நண்பரும், அந்த பகுதியில் உள்ள கால்வாய் பாலம் என்கிற குளத்தின் அருகே பேசிக்கொண்டு இருந்துள்ளனர். வழக்குகள் குறித்து விசாரிப்பதற்காக விக்னேஷ் என்ற காவலர் சுகுமாரனையும் அவரது நண்பரையும் காணச் சென்றுள்ளார். அவரை கண்டதும் , நீண்ட நேரமாகப் பேசியவர்கள் தப்பி ஓடியுள்ளனர் ..
ஏற்கனவே, புதுக்கோட்டையில் உள்ள கணேஷ் நகர் காவல் நிலையத்தில் சுகுமாரன் மீது சிறு சிறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிகின்றது. வழக்கு குறித்து விசாரிப்பதற்காகக் காவலர் அங்குச் சென்றுள்ளார். அவர் வருவதைப் பார்த்த சுகுமாரனும் அவர் நண்பரும் தங்களை போலீஸ் பிடிக்க வருவதாக நினைத்து அங்கிருந்து ஓடியுள்ளனர். அவரிடம் பிடிபடக் கூடாது என்ற நிலையில் இரண்டு பேரும் செய்வதறியாது ஒட்டியுள்ளனர். இதில் சுகுமாரன் தடுமாறிய நிலையில் அருகே இருந்த குளத்தில் விழுந்துள்ளார். இதுகுறித்து தீயணைப்புத் துறைக்குக் காவலர் விக்னேஷ் தகவல் கொடுத்துள்ளார் . தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சுகுமாரின் சடலத்தை மீட்டனர்.பயந்து ஓடிய சுகுமாரனுக்கு நீச்சல் தெரியாது என்பதால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் . பின்னர் இறந்தவரின் சடலத்தை உடற்கூறாய்வு செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பினர் .
இந்த சம்பவம் அந்த பகுதியில் வாழும் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.