ரத்த காயங்கள்... டி-ஷர்ட்டில் சுற்றப்பட்ட உடல்.... - கோவை அருகே 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
கோவை துடியலூர் அருகே மாயமான சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சதீஸ் மற்றும் வனிதா. இவர்களுக்கு ஏழு வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தக் குழந்தை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சிறுமி நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்தபின் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். விளையாடி கொண்டிருந்த சிறுமி நேற்று மாலை வெகு நேரமாகியும் வரை வீடு திரும்பவில்லை. சிறுமி நீண்ட நேரமாக திரும்பிவராததை அடுத்து பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர்.
இதனையடுத்து பெற்றோர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், உதவி ஆய்வாளர் பூபதி தலைமையிலான காவல்துறையினர் மாயமான சிறுமியை தேடி வந்தனர். ஆனால், கிடைக்கவில்லை. விடிய விடிய குழந்தையை தேடிய நிலையில், காலை அதே பகுதியிலுள்ள மற்றொரு வீட்டின் அருகே முட்டுச்சந்தில் முகத்தில் டி சர்ட் சுற்றப்பட்ட நிலையில் உடல் முழுவதும் காயங்களுடன் மீட்கப்பட்டார்.
டி-ஷர்ட்டில் சுற்றப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு வந்து பார்த்தபோது, முகம் மற்றும் உடல் முழுவதும் காயங்களுடன் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாயமான சிறுமி பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மருத்துவமனை முன்பு திரண்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் 40-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். சிறுமியை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கண்டு பிடித்து கைது செய்ய வேண்டும். சிறுமியின் சாவுக்கு நீதி வேண்டும் என்று கோஷமிட்டனர். திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.