எந்தச் சின்னம் ஒதுக்கினாலும் சரி...மக்கள் வெற்றிச் சின்னமாக்குவார்கள் ...டிடிவி தினகரன் நம்பிக்கை
அமமுகவுக்கு எந்தச் சின்னத்தை ஒதுக்கினாலும் மக்கள் அதனை வெற்றிச் சின்னமாக்கி காட்டுவார்கள் என்று டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில், 59 தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு வேறு ஒரு பொது சின்னத்தை ஒதுக்க பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், குக்கர் சின்னம் வழக்கில் உச்ச நீதிமன்றம் எங்களுக்கு நீதி வழங்கியதாகவே நினைக்கிறேன். பொதுச் சின்னம் ஒதுக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், தேர்தல் ஆணையம் தங்கள் கட்சிக்கு நிச்சயம் ஏதேனும் ஒரு சின்னத்தை ஒதுக்கும். குக்கர் சின்னம் கிடைக்காததால் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படப் போவதில்லை. தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தை தமிழக வாக்காளர்கள் வெற்றி சின்னமாக மாற்றுவார்கள்.
நாளை முதல் சென்னை ராயபுரத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளேன்.தேர்தல் ஆணையம் வழங்கும் சின்னத்தில் அமமுக போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெறுவோம். அமமுக வேட்பாளர்கள் 59 பேர்தான் தமிழ்நாட்டு மக்களின் ஆயுதம். தமிழகத்தில் ஜனநாயக விரோதிகளை 59 வேட்பாளர்களும் வீழ்த்துவர். 59 சின்னத்தில் அமமுக வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார்கள்.தேர்தல் ஆணையம் எந்தச் சின்னம் ஒதுக்கினாலும், அது அமமுகவின் வெற்றி சின்னமாக இருக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.