கவலைப்படும்படி இல்லை... சரியாகி விடும்... உலகக்கோப்பையில் பும்ரா பங்கேற்பது குறித்து பிசிசிஐ நம்பிக்கை
பும்ராவுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் கவலைப்படும்படி இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டியின் 3-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில், இதில் 20-வது ஓவரின் கடைசிப் பந்தை பும்ரா வீசினார். அப்போது திடீரென பந்தை தடுக்க ஓடிவந்து குனிந்தபோது, பும்ரா கீழே விழுந்தார். இதில் பும்ராவுக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு, தோள்பட்டையை நகர்த்தக் கூட முடியாமல் கீழே சரிந்தார். உடனடியாக அனைத்து வீரர்களும் அங்கு வந்து கூடினார்கள். ஆனாலும் பும்ராவால் தனது இடதுகையை தூக்க முடியவில்லை. அதன்பின் மும்பை இந்தியன்ஸ் உடற்தகுதி நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, பும்ரா ஓய்வறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிறப்பாக பந்துவீசும் வீரர் என சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறார் பும்ரா. தரவரிசையிலும் இடம்பிடித்து வருகிறார். உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சுப் படையின் முக்கியத் துருப்புச்சீட்டாக இருக்க அவரை தயார்படுத்தி வந்தது இந்திய அணி நிர்வாகம். இந்த நிலையில் அவரது காயம் தேர்வாளர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. காயத்தின் தன்மை குறித்து பும்ராவுக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இதற்கிடையே, கிரிக்கெட் வாரிய தரப்பில் கூறும்போது, பும்ராவுக்கு தோள்பட்டையில் ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் கவலை கொள்ளும்படியான காயம் இல்லை. கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்த அனைத்து ஸ்கேன்களும் பும்ராவுக்கு செய்யப்பட்டது என தெரிவித்தனர். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த ஐபிஎல்., போட்டியில் பும்ரா பங்கேற்கமாட்டார் என தெரிகிறது.